மதுரை முனிச்சாலை சந்திப்பில், அதிமுக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு முறைப்படி தொடங்கி வைத்தார். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அதிமுக வழங்கிய பிரசார நோட்டீஸில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை, வீடற்ற அனைவருக்கும் அம்மா இல்லம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு, மகளிர் இருசக்கர வாகன மானியம் ரூ. 25,000 ஆக அதிகரிப்பு போன்ற முக்கிய அம்சங்களிடம் பெற்றுள்ளது.
பிரசாரத்தைத் தொடங்கி வைத்து செல்லூர் கே.ராஜு பேசியதாவது: “திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறியுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விடியல் தருவதாகக் கூறி ஆட்சியில் அமர்ந்த திமுக, மக்களுக்குக் கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே தந்துள்ளது.
2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இல்லாத நிலையை உருவாக்க மதுக்கடைகளை மூடுவதற்கான கோப்பில் அவர் முதல் கையெழுத்திடுவார். அதிமுக சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும்,” என்றார்.
“திமுக ஆட்சியில் மின் கட்டணம் உள்ளிட்ட வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. மின் கட்டண உயர்வைக் கண்டு அஞ்சி, மக்கள் மின்விசிறியை (Fan) கூட போடத் தயங்குகின்றனர். அதிமுக 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட கொண்டு வரவில்லை. அதிமுகவின் 10 கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வோம்,” என அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
