குஜராத் மாநிலம் சூரத்தில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது பட்டம் விட்ட மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஜஹாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் அமோல் போர்சி. இவரது 8 வயது மகன் ரஹனேஷ், நேரு  தனது நண்பர்களுடன் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான்.

அப்போது, எதிர்பாராத விதமாகப் பட்டத்தில் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல், சிறுவன் ரஹனேஷின் கழுத்தை இறுக்கி அறுத்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகச் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரஹனேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் குஜராத் முழுவதும் மகர சங்கராந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதும், அதன் ஒரு பகுதியாகப் பல இடங்களில் பட்டம் விடப்பட்டதும் தெரியவந்தது. அவ்வாறு விடப்பட்ட பட்டத்தின் அறுந்த மாஞ்சா நூல் தெருவில் தாழ்வாகத் தொங்கிய நிலையில், சைக்கிளில் வந்த சிறுவனின் கழுத்தை அறுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரைப் பறிக்கும் மாஞ்சா நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும், இத்தகைய உயிரிழப்புகள் தொடர்வது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.