உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமத்தில், நாய் ஒன்று கடந்த 5 நாட்களாகக் கோவிலைச் சுற்றி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்த்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பழங்காலக் கோவிலில், நாய் ஒன்று கடந்த 120 மணி நேரமாக உணவு மற்றும் தண்ணீர் ஏதுமின்றி தொடர்ந்து ஹனுமான் மற்றும் துர்க்கை சிலைகளைச் சுற்றி வந்துள்ளது. ஐந்து நாட்களாகத் தொடர்ந்து வலம் வந்த அந்த நாய், சோர்வு மற்றும் பலவீனம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தது. இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், நாயை ஒரு மெத்தையில் படுக்க வைத்துப் போர்வையால் போர்த்திப் பராமரித்து வருகின்றனர்.

இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கோவிலுக்குப் படையெடுத்து வருகின்றனர். மக்கள் அந்த நாயைத் தெய்வத்தின் ஆசி பெற்ற “அதிசய நாய்” எனக் கருதி, அதற்குப் பிரசாதம் மற்றும் காணிக்கை வழங்கி வழிபாடு நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கோவிலுக்கு வெளியே தற்காலிகக் கடைகளும் உருவாகியுள்ளன.

தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் நாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அது பால் அல்லது ரொட்டி எதனையும் உட்கொள்ள மறுத்ததால், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இது குறித்து மருத்துவர் அஷ்வனி சித்ரான்ஸ் கூறுகையில், “பல நாட்களாக உணவு உட்கொள்ளாததால் நாயின் உடலில் நீர்ச்சத்து மற்றும் தாதுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் உயிரைக் காக்க குளுக்கோஸ் மற்றும் மல்டி-வைட்டமின் சொட்டுகள் அடங்கிய ‘பழ சிகிச்சை’ (Fluid Therapy) அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

அறிவியல் ரீதியாக இது நாயின் உடல்நலக் குறைபாடாகக் கருதப்பட்டாலும், கிராம மக்கள் இதனை ஒரு தெய்வீகச் செயலாகவே நம்பி வருகின்றனர்.