கர்நாடகா மாநிலம், சிந்தகி அருகிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ஜூலை 11ஆம் தேதி ரோந்து சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு காட்சி காத்திருந்தது. அங்கு உள்ள ஒரு இயற்கை குகைக்குள் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த நினா குட்டினா (வயது 40), தனது இரு மகள்கள் ப்ரேயா (6), அமா (4) ஆகியோரை உடன் கொண்டு ஏற்கெனவே இரண்டு வாரங்களாக தங்கியிருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு காரணங்களால் அவர்களை போலீசார் வெளியே அழைத்து, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், அந்த இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் நினாவின் கணவராகக் கூறப்படும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ட்ரோர் கோல்ட்ஸ்டெயின் (Dror Goldstein), நினா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “நான் என் குழந்தைகள் மற்றும் மனைவிக்கு நிதி உதவி செய்தேன். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை தர விரும்பினேன். ஆனால், நினா என்னை தொடர்ந்து வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்து வந்தார். மேலும், அவர் என்னை பணத்துக்காக மட்டுமே பயன்படுத்துவதாக உணர்ந்தேன். அதனால், அவரிடமிருந்து விலக முடிவெடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் என் மகள்களை சந்திக்க விரும்பினேன். அதற்காக கோவாவுக்கு பலமுறை சென்றேன். ஆனால் நினா என்னை சந்திக்க மறுத்தார். திடீரென காணாமல் போய்விடுவார். என் குழந்தைகளைத் தனிமைப்படுத்தி, என்னிடமிருந்து விலகி இருக்க வைக்கும் வகையில் மூளை சலவை செய்து வருகிறார்” என்றும் அவர் கூறினார். “குழந்தைகள் சமூகத்தில் கலந்துகொள்ள கூட அனுமதிக்கவில்லை. அவர்களை ஒரு மூடிய குழுவிலேயே வைத்து வளர்த்து வருகிறார்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நான் என் மகள்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பங்களிக்க விரும்புகிறேன்” என ட்ரோர் கோல்ட்ஸ்டெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் வெளிவந்த பிறகு, நினா மற்றும் அவரது குழந்தைகள் தற்போது அதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.