மகாராஷ்டிர மாநிலத்தில் சிவம் உபாத்யாயா (27) என்ற வாலிபர், நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை நான்சியின் தாய் சவீதா மிஸ்ரா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிவம், அவர்கள் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்ட சிவம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாய் மற்றும் மகள் இருவரையும் சரமாரியாகக் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மனமுடைந்த சிவம், அதே கத்தியால் தனது உடலிலும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூன்று பேரும் ரத்தக் கொலத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவம் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.