சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறிய இளம் ஜோடி ஒருவர் போலீசின் பாதுகாப்பை நாடியபோது, அதற்கு மாறாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
அதாவது காவல் நிலையத்திற்கு வந்த 24 வயது இளம்பெண்ணும் 25 வயது வாலிபரும், “நாங்கள் காதலித்து ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். குடும்பத்தினர் எங்களை பிரிக்க முயல்கிறார்கள்” என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கையில், அந்த இளம்பெண்ணின் பெற்றோர்களுடன் 30 வயது வாலிபர் ஒருவரும் அங்கு வந்தார். அவர், “அந்த பெண்ணின் முறைப்படி திருமணம் செய்த முதல் கணவர் நான் தான்” என்று கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் 2021-ம் ஆண்டு ஓமலூர் அருகே கொங்குபட்டி பகுதியை சேர்ந்த இந்த 30 வயது வாலிபருக்கும், போலீசில் தஞ்சம் அடைந்த இளம்பெண்ணுக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. குழந்தைகள் இல்லை என்றும் கூறப்பட்டது.
திருமணத்திற்குப் பின், அருகிலுள்ள துணிக்கடையில் வேலைக்கு சென்ற இளம்பெண், அங்கு பழக்கமான சிமெண்டு விற்பனை கடையில் வேலை செய்த 25 வயது வாலிபருடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டதாக விசாரணையில் தெரிந்தது. கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு சென்று, ஒரு கோவிலில் தாலி கட்டிக்கொண்டதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர்.
முறைப்படி திருமணம் செய்த கணவர் உடன் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியபோதும், இளம்பெண் காதலனுடன் தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு போலீசார், “முதல் திருமணத்தை நீதிமன்றம் மூலம் ரத்து செய்யாமல் மறுமணம் சட்டப்படி செல்லாது” என்று எச்சரிக்கை வழங்கினர்.
மேலும் இறுதியில், வேறு வழியின்றி அந்த இளம்பெண் தனது பெற்றோருடன் போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். சினிமா காட்சியை நினைவூட்டும் விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
