மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சியை விட்டுச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
“ஒரு சாதாரண டீக்கடை வைத்திருந்தவரை நகராட்சித் தலைவர், எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் முதலமைச்சர் எனப் பல்வேறு உச்ச பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்தது அதிமுகதான். ஆனால், இன்று அதே கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையில் அவர் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
மேலும், ஓபிஎஸ் உடன் தற்போது இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களும் விரைவில் அதிமுகவிற்குத் திரும்பி விடுவார்கள் என்றும், அவருடைய சுயரூபம் அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய செல்லூர் ராஜு, “செங்கோட்டையன், பன்னீர்செல்வம் மற்றும் என்னை (செல்லூர் ராஜு) அடையாளம் காட்டியதே இந்த இயக்கம்தான். அதிமுக இல்லை என்றால் எங்களுக்கு முகவரியே கிடையாது. என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன். இந்த இயக்கத்தை இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், என் தாயே தடுத்தாலும் சரி, ஆண்டவனே தடுத்தாலும் சரி, அவர்களை வன்மையாகக் கண்டிப்பேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்தார்.
ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோரின் சமீபத்திய கருத்துக்கள் யாரோ சொல்லிக் கொடுத்துப் பேசுவது போலத் தெரிவதாகவும், உண்மையான அதிமுக தொண்டன் ஒருபோதும் இப்படிச் செய்யமாட்டான் என்றும் அவர் மதுரையில் முழங்கினார்.
