தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக கடந்த 2 மாதங்களாகப் பொறுமையுடன் காத்திருப்பதாகக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

இதே சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், காங்கிரஸைத் தனது பக்கம் இழுக்கத் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் மூலமாக ராகுல் காந்தியிடமே நேரடியாகப் பேசித் தூது விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை திமுக தங்களுக்குத் தேவையான கூடுதல் இடங்களைத் தர மறுத்தால், கையைப் பிடித்துக் கொண்டு விஜய்யின்  பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவில் காங்கிரஸ் தலைமை இருப்பதாகத் தெரிகிறது. ‘கை’யோடு ‘கைகுலுக்க’ விஜய் போடும் இந்த ஸ்கெட்ச், திமுக முகாமைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.