சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஷர்மிளா (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரவீன் குடும்பத்தினருடன் இருவரும் திருமணத்திற்கு பிறகு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து பிரவீன் பெற்றோருடன் சர்மிளா வசித்து வந்த நிலையில் கடந்த 14-ம் தேதி அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சர்மிளா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.

அதில் என்னுடைய சாவுக்கு தந்தை துரை குமார், தாய் சரளா, என் சகோதரர்கள் நரேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர்தான் என்று எழுதப்பட்டுள்ளது. அவர்கள் என்னுடைய காதல் கணவரை கொலை செய்து அவருடன் சேர்ந்து என்னை வாழ விடாமல் செய்துவிட்டார்கள். அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதனால் நானும் அவருடனே செல்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கணவர் ஆணவ கொலை செய்யப்பட்ட நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.