தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் இசக்கிபாண்டி (42) மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி இடையில் நீண்டநாள் குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால், பரமேஸ்வரி கடந்த 5 ஆண்டுகளாக தனது மகன் சந்தோஷ் (17) மற்றும் 2 மகள்களுடன் முத்தையாபுரம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று இரவு இசக்கிபாண்டி தனது மனைவி வசிக்கும் வீட்டுக்கு சென்று, “என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வா. இல்லையெனில் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் கத்தியால் தாக்க முயன்ற போது, அதைத் தடுக்க முனைந்த மகன் சந்தோஷ் கையில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்.
மேலும் காயமடைந்த சந்தோஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில், முத்தையாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
