சமாஜ்வாடி கட்சி நிறுவனர் மறைந்த முலாயம் சிங் யாதவின் மகனும், அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதீக் யாதவ், தனது மனைவி அபர்ணா யாதவிடமிருந்து விவாகரத்து கோருவதாக அறிவித்திருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடனான உறவு பிரிந்ததற்கு அபர்ணாவே காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “எனது குழந்தை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், நான் பார்த்ததிலேயே இவர்தான் மிகப்பெரிய பொய்யர் மற்றும் சுயநலம் பிடித்தவர்” என்று மிகுந்த ஆவேசத்துடன் பிரதீக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக தலைவராகவும், உத்தரப்பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருக்கும் அபர்ணா யாதவ், புகழுக்காக மட்டுமே ஆசைப்படுபவர் என்றும், அவர் தனது குடும்பத்தையே சிதைத்துவிட்டதாகவும் பிரதீக் அந்தப் பதிவில் சாடியுள்ளார்.

மேலும் ஏற்கனவே தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த சூழலில், பிரதீக் யாதவின் இந்த அடுத்தடுத்த சமூக ஊடகப் பதிவுகள் யாதவ் குடும்பத்திற்குள் இருக்கும் விரிசலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. இந்த விவகாரம் குறித்து அபர்ணா யாதவ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.