உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திய ஹரியானா மாநில சுற்றுலாப் பயணிகளைத் தட்டிக்கேட்ட போலீசாரிடம், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமண் ஜூலா பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த அவர்களை போலீசார் எச்சரித்தபோது, அந்தப் பெண் ஆவேசமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தில் தான் குடிக்கிறோம், உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கூச்சலிட்டதுடன், போலீசாரை ஒருமையில் பேசி அவமரியாதை செய்துள்ளார்.

அந்தப் பெண் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், அங்கிருந்த உள்ளூர் ராஃப்டிங் வழிகாட்டிகள் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது புனிதமான ‘தேவபூமி’ என்றும் இங்கு முறைப்படி நடந்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினர்.

நிலைமை மோசமாவதைக் கண்ட அவருடன் வந்த ஆண் பயணி, அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.