
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக பாண்டி செல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாண்டி செல்வி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தன மாரியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சந்தன மாரியப்பன் தனது மனைவி சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த பாண்டி செல்வி தனது கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் பாண்டி செல்விக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.