மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய பிளஸ்-2 கணிதத் தேர்வுத் தாளில் அச்சிடப்பட்டிருந்த ‘கியூ ஆர்’ (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்த மாணவர்களுக்கு, பாடம் தொடர்பான தகவல்களுக்குப் பதிலாக ஆங்கிலப் பாடல் ஒன்று ஒளிபரப்பானது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தேர்வுத் தாள்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவோ அல்லது தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை வழங்கவோ இத்தகைய ‘கியூ ஆர்’ குறியீடுகள் அச்சிடப்படுவது வழக்கம். ஆனால், பிளஸ்-2 கணிதத் தேர்வுத் தாளில் இருந்த குறியீட்டை மாணவர்கள் ஸ்கேன் செய்தபோது, அது புகழ்பெற்ற ஆங்கிலப் பாடகர் ரிக் ஆஸ்ட்லியின் (Rick Astley) ‘நெவர் கன்னா கிவ் யூ அப்’ (Never Gonna Give You Up) என்ற பாடலுக்கு இட்டுச் சென்றது.

இணைய உலகில் ஒருவரை ஏமாற்றி தங்களுக்குத் தேவையான சுட்டியை (Link) கிளிக் செய்ய வைத்து, அதற்குப் பதிலாக இந்தப் பாடலை ஒளிரச் செய்வதை “ரிக்ரோலிங்” (Rickrolling) என்று வேடிக்கையாக அழைப்பார்கள். தற்போது சிபிஎஸ்இ தேர்வுத் தாளிலேயே இத்தகைய ஒரு குறும்புத்தனம் அரங்கேறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக மாணவி ஒருவர் வெளியிட்ட வீடியோவில், “இது எனது கணிதத் தேர்வுத் தாள். இதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் என்ன நடக்கிறது என்று பாருங்கள்” எனக் கூறி ஸ்கேன் செய்ய, அந்தப் பாடல் ஒலிக்கிறது. இதேபோல் பல்வேறு தேர்வுத் தாள் தொகுப்புகளிலும் (Sets) அதே பாடல் வருவதாக மற்ற மாணவர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதள எதிர்வினைகள்:
இச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட பயனர் ஒருவர், “தயவுசெய்து இந்தத் தேர்வுத் தாளில் உள்ள குறியீட்டை ஒருமுறை ஸ்கேன் செய்து பாருங்கள். 2026-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ இவ்வாறெல்லாம் செய்யும் என நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று வியப்புடன் பதிவிட்டுள்ளார்.
தேர்வு வாரியத்தின் தரப்பில் நேர்ந்த தொழில்நுட்பத் தவறா அல்லது திட்டமிட்ட குறும்பா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை. மாணவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் சிரிப்பலையையும், அதே சமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.