ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூர் புதிய பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன்  கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் (28 பந்துகளில் 97 ரன்கள்) நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

கடின இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு, 3-வது ஓவரிலேயே இஷான் கிஷன் (11 பந்துகளில் 33 ரன்கள்) ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்த விக்கெட்டைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கரம் ஓங்கியதால், குவாலிஃபையர் 2 சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் நகர்ந்துள்ளது.

 


இதற்கிடையில், தனது அணியை உற்சாகப்படுத்த மைதானத்திற்கு வந்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், போட்டியின் போக்கால் மிகுந்த ஏமாற்றமடைந்தார். குறிப்பாக, அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த  இஷான் கிஷன் விக்கெட்டை இழந்தபோது, காவ்யா மாறன் கோபத்துடனும் விரக்தியுடனும் கைகளை அசைத்து காட்டிய ரியாக்‌ஷன் நேரடி ஒளிபரப்பில் வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

எப்போதும் தனது அணியுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கும் காவ்யா மாறனின் இந்த வைரல் புகைப்படம், ஹைதராபாத் ரசிகர்களிடையே தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.