ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள பகீர் மோகன் கல்லூரியில் பயின்று வந்த ஒரு பெண் மாணவி, தன்னுடைய துறைத் தலைவர் சமீர் குமார் சாகு அவருக்கே தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதற்கு சம்மதிக்காவட்டால் எதிர்காலம் நன்றாக இருக்காது படிப்பை சீரழித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனால், ஜூலை 13-ஆம் தேதி சனிக்கிழமை, மாணவி திடீரென கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு, முதல்வரின் அலுவலகத்திற்கு அருகே பெட்ரோல் ஊற்றி தன்னை தானே தீ குளித்துக் கொண்டார்.. இதில், அவர் 95% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும், அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவியர் 70% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, ஜூலை 1-ஆம் தேதி, அந்த மாணவி, துறைத் தலைவர் சாகுவின் மீது Internal Complaints Committeeயிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், “7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மன அழுத்தத்தில் சிக்கிய மாணவி, தன்னைத்தானே தீ வைத்த சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளியான நிலையில், மாணவி தீயில் ஏறி ஓடிக்கொண்டிருந்ததையும், ஒரு மாணவர் அவரை காப்பாற்ற முயன்றதும், அவரது டீஷர்டுக்கு தீ பிடித்ததும், பிறகு மற்றவர்கள் பயமுடன் தீயை அணைக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
கல்லூரி முதல்வர் திலீப் கோஷ், “மாணவி இன்று என் அலுவலகத்தில் வந்து, மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறியபடி, சாகுவை அலுவலகத்திற்கு அழைத்தோம். இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, மாணவி தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார். சாகு மறுத்தார். உண்மை தெரிய வரும் வரை எச்சரிக்கையும் வழங்கப்பட்டது,” என கூறினார். இந்நிலையில், சாகுவை தற்காலிகமாக காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற மாணவர் இருவரும் தற்போது புவனேஷ்வர் ஏம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக கல்லூரியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
