வேலை தேடி சலித்துப்போன இளைஞர் ஒருவர், தனக்கு வேலை தராமல் ஏமாற்றிய நிறுவனங்களுக்கு எதிராக ஹாங்காங்கில் உள்ள ஒரு வினோத பாரம்பரிய சடங்கைச் செய்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கன்டென்ட் கிரியேட்டரான ஷோ திவான் (Sho Dewan) என்பவர், ஹாங்காங்கின் காஸ்வே பே (Causeway Bay) பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் அமர்ந்திருக்கும் வயதான பெண்களிடம் சென்று, வெறும் 5 டாலர் (சுமார் 400 ரூபாய்) கொடுத்து இந்தச் சடங்கைச் செய்துள்ளார்.

அங்குள்ள உள்ளூர் முறைப்படி இதற்கு “வில்லன் ஹிட்டிங்” (Villain Hitting) என்று பெயர். அதாவது நமக்கு பிடிக்காதவர்களை அல்லது துரதிர்ஷ்டத்தை காகித பொம்மை மூலம் அடித்து விரட்டும் ஒரு கலாச்சாரமாகும். தனது வேலை விண்ணப்பங்களை நிராகரித்த மற்றும் பதில் சொல்லாமல் இழுத்தடித்த அனைத்து நிறுவனங்களையும் மனதில் நினைத்துக்கொண்டு அவர் இந்தச் சடங்கைச் செய்துள்ளார்.

“வேலை வாய்ப்பு சந்தை மிக மோசமாக உள்ளது, அதனால் என்னை கண்டுகொள்ளாத நிறுவனங்களுக்கு 5 டாலர் செலவில் சாபம் விட்டுவிட்டேன்” என அவர் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “யாரும் உங்களைக் தப்பு சொல்ல மாட்டார்கள், அந்த கம்பெனிகளுக்கு இது தேவைதான்” என்றும், “ஆன்லைனில் சாபம் விட முடியுமா?” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவின் கீழ் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.