பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிய லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியான முகமது உஸ்மான் ஜட், ஸ்ரீநகரில் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்தியாவில் இருந்து தப்பிக்க முயன்ற அதிர்ச்சித் தகவலை தேசிய புலனாய்வு முகமை அம்பலப்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கை உருவாக்கவும் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட இவருக்கு கடுமையான தலைமுடி உதிர்வு பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் தனது தோற்றத்தை மாற்ற முடிவெடுத்த உஸ்மான் ஜட், ஸ்ரீநகரில் உள்ள ஒரு உள்ளூர் கடைக்காரர் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களின் உதவியுடன் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்குப் பிறகு, போலி ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றைத் தயாரித்து இந்தியாவில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருந்ததாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஸ்ரீநகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவனிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் பயிற்சி முகாம்களில் காஷ்மீரைப் பற்றி தவறான சித்திரத்தைக் காட்டி தன்னை அனுப்பியதாகவும், ஆனால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பார்த்த பிறகு தனது நோக்கம் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
மேலும், இவனது இந்த விசித்திரமான செயல்பாட்டின் மூலம் ஸ்ரீநகர் மற்றும் வட காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத ஆதரவு நெட்வொர்க் குறித்தான பல முக்கிய ரகசியங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர்.
