நீண்ட கால அமைதிக்குப் பிறகு, சசிகலா தனது புதிய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், புதிய கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார்
அதிமுகவில் தனக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்த நிலையில், சசிகலா இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளார். பசும்பொன்னில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட புதிய கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையின் வருகைதான். சசிகலாவுக்கு வரவேற்புரை ஆற்றிய அவர், “பொறுமைக்கு இலக்கணமாகத் திகழும் ஆற்றல்மிக்க தாய்” என்று சசிகலாவைப் புகழ்ந்து பேசினார்.
1997-இல் பணியில் சேர்ந்த இவர், ரவுடி கோ.சி. ஜான் முதல் அயோத்திக்குப்பம் வீரமணி வரை பல முக்கிய என்கவுண்டர்களைச் செய்தவர். 2004-இல் சந்தனக் கடத்தல் வீரப்பனை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையிலும் இடம்பெற்றவர். மொத்தம் 12-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை நிகழ்த்தி ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெயர் பெற்றவர்.
கடந்த 2024-இல் பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சசிகலா தொடங்கவுள்ள புதிய கட்சியின் சார்பில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெள்ளத்துரை போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சவாலாக சசிகலா எடுத்துள்ள இந்த விஸ்வரூபம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
