நைஜீரிய நாட்டில் 16 வயது சிறுவன் ஒருவன், தனக்கு 30 வயது என்று பொய் கூறி அந்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான ‘ஆல் ப்ரோக்ரசிவ் காங்கிரஸ்’ கட்சியையே ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தல் சீட் வாங்கும் வரை சென்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் ‘ஜாரியாவின் அதிசயம்’ என்று அழைக்கப்படும் மஹமூத் சாதிஸ் புபா என்ற இந்த சிறுவனுக்குக் குள்ளத்தன்மை குறைபாடு உள்ளதால், அவனது தோற்றம் சிறுவன் போலவே இருந்துள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட அவன், தனக்கு 30 வயது என்றும், இந்த நோயின் காரணமாகவே தான் சிறுவன் போல் தோற்றமளிப்பதாகவும் கூறி அக்கட்சியின் நேர்காணலில் பங்கேற்றுள்ளான். நைஜீரிய சட்டப்படி தேர்தலில் போட்டியிட 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பதால், இவனது பேச்சைக் கேட்டு ஏமாந்த கட்சித் தலைமை, அவனுக்குத் தேர்தல் டிக்கெட் வழங்கத் தயாரானது. இதற்கிடையே அவன் பேசிய நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி, அவன் மக்களின் புதிய தலைவனாகக் கொண்டாடப்படத் தொடங்கினான்.
ஆனால், இந்த திடீர் புகழே அவனுக்கு வினையாக முடிந்தது. அவனது பள்ளி ஆசிரியர் ஒருவர் திடீரென ஊடகங்கள் முன் தோன்றி, “இவன் சில ஆண்டுகளுக்கு முன்புதான் என்னிடம் ஜூனியர் ஹைஸ்கூலில் படித்தான், இன்னும் மைனர் சிறுவன்தான்” என்று உண்மையை உடைத்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவனது உண்மையான பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவை வெளியாகின.
அதன்படி அவன் 2010-ல் பிறந்த 16 வயது சிறுவன் என்பது உறுதியானது. ஆரம்பத்தில் இது எதிர்க்கட்சிகளின் சதி என்று மறுத்த ஆல் ப்ரோக்ரசிவ் காங்கிரஸ் கட்சி, ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் வேறு வழியின்றி அச்சிறுவனைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. முறையான ஆவணச் சரிபார்ப்பு இல்லாமல் ஒரு சிறுவனிடம் ஏமாந்து போன ஆளுங்கட்சியின் இந்தச் செயல் நைஜீரியா முழுவதும் தற்போது பெரும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.
