பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும், சில்மிஷங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ரயில் நிலையம் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மிகவும் அநாகரிகமான முறையில் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் ரோஹித் சிங் என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த சிசிடிவி காட்சியில், ஆள் நடமாட்டம் உள்ள அந்த ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த முதியவர், தனது கையில் வைத்திருந்த செய்தித்தாளின் மறைவில், அந்தப் பெண்ணின் உடலைத் தவறான முறையில் மீண்டும் மீண்டும் தொட்டு அநாகரிகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

 

 

அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவரால் உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் போனது. இந்த அருவருக்கத்தக்க சம்பவம் எப்போது, எந்த ரயில் நிலையத்தில் நடைபெற்றது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், மே 28-ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்த விடியோவைக் கண்ட இணையவாசிகள் மற்றும் பொதுமக்கள் பலரும், “இந்த வயதிலும் இப்படி ஒரு புத்தியா? வயதுக்குக் கூட மரியாதை கொடுக்காமல் தன் மகள் வயதுடைய பெண்ணிடம் அசிங்கமாக நடந்துகொண்ட இவரை உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என மிகுந்த கோபத்துடன் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.