மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில், தந்தூரி ரொட்டி தயாரிக்கும் போது அதன் மீது எச்சில் துப்பி சமைத்ததாக ஓட்டல் தொழிலாளி கௌஷார் ஷேக் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஃபையாஸ் ஷேக் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கோரேகான் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள ‘ஃபிஷ் கோலிவாடா’ (Fish Koliwada) என்ற ஓட்டலில் இந்த அருவருக்கத்தக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. சமையல்காரர் கௌஷார் ஷேக் ஒவ்வொரு ரொட்டியையும் தந்தூரி அடுப்பில் போடுவதற்கு முன்பாக, அதன் மீது எச்சில் துப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 23, 2026 அன்று இரவு தீபக் தத்தாராம் பவார் என்ற வாடிக்கையாளர் அந்த ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றபோது, சமையல்காரரின் இந்த அநாகரிகச் செயலைத் தூரத்திலிருந்து கவனித்துள்ளார். உடனடியாக அதனைத் தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்த அவர், அப்பகுதி மக்களிடமும் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மே 25 அன்று உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளியையும் ஓட்டல் உரிமையாளரையும் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உணவகங்களில் சுகாதாரமற்ற மற்றும் அநாகரிகமான முறையில் உணவு தயாரிக்கப்படும் இத்தகைய சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.