
எனக்கு நீதாண்டா வேண்டும் என்று 17 வயது சிறுமி ஒருவர் அடம்பிடிக்க, நல்லா இருப்ப என்ன விட்டுடு என்று இளைஞர் கெஞ்சி பார்த்தும் அந்த சிறுமி விடாததால் மணிகண்டன் கையை அறுத்து கொண்டார். திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவிநாசி காவல் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்து இறங்கிய நடத்துனர் பேருந்துக்குள் இளம் பெண்ணுடன் அமர்ந்திருந்த இளைஞர் அந்த பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டு தனக்குத்தானே கையை பிளேடால் அறுத்து கொண்டதாக புகார் தெரிவித்தார்.
உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அந்த இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட பேருந்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். உடன் வந்த பெண் அழுது கொண்டே நின்றார். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மணிகண்டன் என்ற சந்தோஷ் என்பதும் உடன் அழுது கொண்டிருந்தது அவர் காதலியான 17 வயது சிறுமி என்பதும் தெரிய வந்தது.
கோவை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு திருப்பூர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் வசித்து வந்த போது மணிகண்டனுடன் காதல் மலர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டனை மடக்கிய போத்தனூர் அனைத்து மகளிர் போலீசார் மைனர் பெண்ணை கடத்தியதாக கூறி போக்சோ வழக்கில் கைது செய்தனர். இருவரும் காதலிப்பதாக போலீசில் மணிகண்டன் தெரிவித்த நிலையில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியை அவரது சம்மதம் இருந்தாலும் காதலிப்பது குற்றம். அவரை வெளியே அழைத்து செல்வது கடத்தலுக்கு சமம் என சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதை அடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த மணிகண்டன் ஜாமினில் அண்மையில் வெளியே வந்துள்ளார். இதை அடுத்து அந்த சிறுமி மீண்டும் மணிகண்டனை தேடி அவரது இருப்பிடத்திற்கு சென்றுள்ளார். இந்த முறை உஷாரான மணிகண்டன் நீ சின்ன பொண்ணு, உன் வீட்டுக்கு போ என்று கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த அந்த சிறுமி, எனக்கு நீதாண்டா வேணும் என்று அடம்பிடித்த நிலையில் ஒரு வழியாக சமாதானப்படுத்தி கோவையின் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மணிகண்டன் பேருந்தில் செல்லும்போது, தான் வீட்டிற்கு செல்ல மாட்டேன் உன்னுடன் தான் இருப்பேன் என்று அந்த சிறுமி மீண்டும் அடம் பிடித்ததால் அவரை பயமுறுத்துவதற்காக தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கையை தானே அறுத்துக் கொண்டதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் அந்த சிறுமியை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.