துபாயிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர் ஒருவர், திருமணமான தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஹ்டார் பகுதியைச் சேர்ந்த ஆசிப் குரேஷி என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ரமலான் பண்டிகைக்காக ஊர் திரும்பிய அவருக்கு, காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

திருமணம் உறுதியான மகிழ்ச்சியில், ஆசிப் இனிப்புகள் மற்றும் பேரீச்சம்பழங்களுடன் ஷெர்கோட் பகுதியில் வசிக்கும் தனது பழைய காதலியைக் காணச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியின் வீட்டிற்குச் சென்ற ஆசிப், அவருடன் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அப்பெண்ணின் கணவர் வீட்டார்கள், அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது ஆசிப்பும் அந்தப் பெண்ணும் ஆடையின்றி அநாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று ஆசிப்பை சரமாரியாகத் தாக்கினர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினரும் ஆசிப்புக்கு ‘தர்ம அடி’ கொடுத்தனர்.

இது குறித்து அந்தப் பெண்ணின் மைத்துனர் கூறுகையில், “எனது அண்ணி செல்போனில் நீண்ட நேரம் யாருடனும் பேசுவார். கேட்டால் மழுப்பலாகப் பதிலளிப்பார். அவர் மீது ஏற்கனவே எங்களுக்குச் சந்தேகம் இருந்தது. இன்று இந்த இளைஞர் இனிப்புகளுடன் வந்தபோது, அவருடன் அறைக்குள் சென்றதால் எங்கள் சந்தேகம் உறுதியானது. குடும்ப மானம் கருதி போலீஸில் புகார் அளிக்கவில்லை, ஆனால் அவருக்கு உரிய பாடம் புகட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஆசிப் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.