உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணமான முதல் இரவிலேயே மணமகள் ரூ. 90 லட்சம் பணம் கேட்ட வினோத சம்பவமும், அதைத்தொடர்ந்து மணமகன் குடும்பத்தை எரித்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக்ராவின் ஜகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. பெரும் கனவுகளுடன் மணமகன் தனது முதலிரவு அறைக்குச் சென்றார். அவர் மணமகளின் முகத்திரையை அகற்ற முயன்றபோது, மணமகள் அவரை தடுத்து நிறுத்தி ஒரு வினோத நிபந்தனையை விதித்தார்.

எனது முகத்திரையை அகற்ற வேண்டும் என்றால், இப்போதே என் கையில் ரூ. 90 லட்சம் ரொக்கமாக வைக்க வேண்டும்” என மணமகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எதிர்பாராத இந்த கோரிக்கையைக் கேட்டு மணமகன் அதிர்ச்சியில் உறைந்து போனார். இரவு முழுவதும் மணமகள் பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மறுநாள் காலை, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு மணமகள் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, ஆயுதங்களுடன் மணமகனின் வீட்டிற்கு வந்த பெண்ணின் உறவினர்கள், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பூட்டினர்.

அதோடு நிறுத்தாமல், வீட்டில் இருந்த பி.என்.ஜி எரிவாயு குழாயை உடைத்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீ வைத்து எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு பயந்து அலறிய குடும்பத்தினர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து மணமகன் குடும்பத்தினரை மீட்டனர்.

மேலும் மணமகள் தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மணமகனின் புகாரின் பேரில், மோசடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்ராவில் அரங்கேறிய இந்த சினிமா பாணி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.