ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11 வயது சிறுமி ஆராத்யா ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வகுப்பில்  உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் ஆனால் அவரது வகுப்பு ஆசிரியர் அதனை கண்டு கொள்ளாது அவரை கணக்கு பரிட்சை எழுத கட்டாயப்படுத்தி அமர வைத்துள்ளார். அப்போதும் சிறுமி தன்னால் முடியவில்லை என்று கூறி வாந்தி எடுத்ததால் பள்ளியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போதும் ஆராத்யா வாந்தி எடுத்துள்ளார் ஆனால் இது பற்றி பெற்றோர்க்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு சென்ற ஆராத்யா மீண்டும் வாந்தி எடுத்தவுடன் தங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை கொடுத்தும் பலன் அளிக்காமல் ஆராத்யா பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் மகளின் உடல் நிலை மோசமானதை பெற்றோரான தங்களுக்கு தெரியப்படுத்தாதது பள்ளியின் தவறு என்று ஆராத்யாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.