டெல்லியின் பிதாம்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிராமண மகாசபா விழாவில், டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பேசினார். ஸ்ரீ பிராமண சபா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூகவியலாளர்கள், அறிஞர்கள், சமுதாய பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ரேகா குப்தா, பிராமண சமூகத்தின் பங்கு குறித்து பேசினார்.

அவர் கூறியதாவது: “பிராமணர்கள் நம் சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். அவர்கள் சாஸ்திரங்களுடன் ஆயுதங்களையும் வணங்கியவர்கள். சாஸ்திரமும் அஸ்திரமும் சேர்ந்து தான் நாட்டு பாதுகாப்பிற்கு வலுவாக இருக்கும். மதம் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு, சமூக நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சமூகமாக பிராமணர்கள் இருந்துள்ளனர். எனவே, எந்தவொரு அரசாங்கமும் ஆட்சியில் இருந்தாலும், பிராமண சமுதாயத்தின் நலனுக்காகக் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மேலும் “கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியின் வளர்ச்சி மெதுவாகவே நடைபெற்று வருகிறது. இனி வளர்ச்சிக்கு ‘கியர்’ மாற்ற வேண்டிய நேரம் இது. டெல்லிக்கு தீவிரமான வளர்ச்சி தேவை. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, சமூக ஒற்றுமையுடன் பணியாற்றினால் மட்டுமே, உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்” என்று கூறினார்.