உத்தரப்பிரதேசம் தியோரியா மாவட்டத்தில், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளி மேலாளர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. தியோரியா மாவட்டம் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்று வந்தார். அண்மை நாட்களில் வீட்டிலும், பள்ளியிலும் மாணவியின் நடத்தை மாற்றமடைந்ததைக் கவனித்த பெற்றோர், காரணம் பற்றி  கேட்டபோது, தாயிடம் மாணவி நடந்ததை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவியின் வேதனைக்குரிய வாக்குமூலப்படி, பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா, தனிப்பட்ட முறையில் அலுவலக அறைக்குள் அழைத்து, கதவை பூட்டிய பிறகு, அவரது மீது பாலியல் அத்துமீறல் நடத்தியுள்ளார். மேலும், இது குறித்து எதையும் வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் எனக் கடுமையாக மிரட்டியதாகவும், இது கடந்த சில மாதங்களாக தொடர்ந்துவரும் கொடுமை எனவும் மாணவி கூறியுள்ளார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல்துறை நடவடிக்கை எடுத்தது. மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா கைது செய்யப்பட்டு, அவர்மீது போக்சோ சட்டம் (POCSO Act) உட்பட பல்வேறு கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.