வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் விருந்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகையே அதிர வைத்தது. அதிபர் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட அந்தப் பதற்றமான சூழலில், ஒரு நபர் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிக நிதானமாக அமர்ந்து உணவு அருந்தும் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மற்ற விருந்தினர்கள் அனைவரும் உயிருக்குப் பயந்து மேஜைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்க, இவர் மட்டும் தன் முன்னே ஆயுதங்களுடன் நின்ற பாதுகாப்பு வீரர்களைப் பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

​”அவருக்குப் பாதுகாப்பு மீது இருந்த நம்பிக்கையா அல்லது பசியா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதே விழாவில் ஒரு சில பத்திரிகையாளர்கள் அந்த இக்கட்டான சூழலிலும் மது பாட்டில்களைத் திருடிச் சென்றதும், செல்பி எடுத்துக்கொண்டிருந்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், “நானே ஏதோ தட்டு கீழே விழுந்த சத்தம் என்றுதான் முதலில் நினைத்தேன்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது கோல் தாமஸ் ஆலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.