அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த டி.டி.வி. தினகரன், தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி சேர்ந்திருப்பது மிகுந்த வெட்கக்கேடானது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுயநலத்திற்காகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தினகரனின் செயல் அரசியலில் அறமற்றது எனக் குறிப்பிட்டார்.
மேலும், பா.ஜ.க தலைமையிலான இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பலவீனமான கூட்டணி என்றும், எத்தனை கட்சிகள் இணைந்தாலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறினார். ஏற்கனவே 11 முறை தோல்வியைத் தழுவிய எடப்பாடி பழனிசாமிக்கு, 2026 சட்டமன்றத் தேர்தல் 12-வது தோல்வியைப் பரிசாக அளிக்கும் என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், ஒரு கோடியே 32 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியே மீண்டும் மலரும் என்றும் அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்தார்.
