தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 23 பேர் கொண்ட பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் அவர் மீண்டும் களம் இறங்குவது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர்கள் இருவர், இந்த முறை தங்களது தொகுதிகளை மாற்றியுள்ளனர். அதன்படி கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். வட மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்ட இந்தத் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இந்தத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் களம் காண்கிறார்.
மேலும் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த 23 பேர் பட்டியலில் பெரும்பாலானோர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆவர். திமுக கூட்டணியுடன் பலப்பரீட்சை நடத்த அதிமுக தனது பலமான வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இரண்டாம் கட்டப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
