மத்திய கிழக்கில் நிலையற்ற போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அடுத்த சில வாரங்களில் வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையிலிருந்து புளோரிடா மாகாணத்திற்குப் புறப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், சீனாவின் இந்த நடவடிக்கை சர்வதேச உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தற்போது மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்புக்கும் சீனா ஒருபோதும் ஆயுதங்களை வழங்கியதில்லை. அமெரிக்கா வெளியிடும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்றார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபரின் இந்த நேரடி எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதாகக் கூறப்படும் தகவல்கள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்த விவகாரத்தால் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக மற்றும் தூதரக உறவுகளில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
