அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் நடைபெற்ற உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 7-ஆம் தேதி முதல் இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனை நிரந்தரமாக்குவதற்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் ஈரான் தூதுக்குழுவினர் இதில் பங்கேற்றனர். சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஐந்து சுற்றுகளாகப் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும், முக்கியக் கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
ஈரான் முன்வைத்த 10 கோரிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா விதித்த 3 முக்கிய நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அவை: ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருதல். ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக கைவிடுதல் போன்றவைகளாகும்.
அதோடு லெபனானில் நிலவும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் நிலவிய கடும் கருத்து வேறுபாடு ஒரு காரணம். இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “நம்பிக்கையற்ற சூழலிலேயே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஈரானின் தேசிய நலனைப் பாதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது. போரின் மூலம் சாதிக்க முடியாததை, ராஜதந்திரத்தின் மூலம் சாதிக்க அமெரிக்கா முயல்கிறது. பேச்சுவார்த்தையிலிருந்து விலக அமெரிக்கா ஒரு சாக்குப்போக்கைத் தேடியது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜே.டி. வான்ஸ் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் ஈரான் அவசரம் காட்டவில்லை என்றும், இனி முடிவு அமெரிக்காவின் கையில் இருப்பதாகவும் ஈரான் தரப்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
