உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் வாழும் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி கூட்டமைப்பான ‘நகோகோ’ (Ngogo) குழுவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் பயங்கர மோதல் குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் விலங்கியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்தச் சமூகம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தது. கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானிகள் இக்குழுவைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்த பெரிய குழுவில் விரிசல் ஏற்பட்டு, ‘மத்திய குழு’ மற்றும் ‘மேற்கு குழு’ என இரண்டு பிரிவுகளாகப் பிரியத் தொடங்கின.

தொடக்கத்தில் புவியியல் ரீதியாகப் பிரிந்த இந்தக் குழுக்கள், 2018-ஆம் ஆண்டு முதல் கொடிய வன்முறையில் ஈடுபடத் தொடங்கின. 2018 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், மேற்கு குழுவைச் சேர்ந்த வயதான சிம்பன்சிகள், மத்திய குழுவைச் சேர்ந்த 7 ஆண் சிம்பன்சிகளையும், 17 குட்டிகளையும் கொடூரமாகக் கொன்றுள்ளதை ஆய்வாளர்கள் நேரில் கண்டு ஆவணப்படுத்தியுள்ளனர். மேலும், அதே குழுவைச் சேர்ந்த 14 ஆண் சிம்பன்சிகள் காணாமல் போயுள்ளன. இவை நோய் பாதிப்பால் இறக்கவில்லை என்றும், மோதலிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சராசரியாக 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சிம்பன்சி சமூகங்களில் இத்தகைய பெரிய பிளவுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக 1970-களில் தான்சானியாவில் இத்தகைய மோதல் பதிவாகியுள்ளது. உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்கான கடும் போட்டி. முக்கிய தலைவர்களின் இறப்பு. சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்.
இவையே இந்தப் பிரிவினைக்கும், அதன் பின் உருவான ‘ரோந்து’ மற்றும் ‘எல்லைப் போர்’ போன்ற வன்முறைப் போக்கிற்கும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆரோன் சாண்டல் தலைமையிலான குழு, இந்த அரிய மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்த ஆய்வுக் கட்டுரையை உலகப்புகழ் பெற்ற ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிட்டுள்ளது. மேலும் ஒருமுறை பிரிந்த பிறகு, அக்குழுக்கள் ஒருவரை ஒருவர் எதிரிகளாகவே பார்க்கத் தொடங்குவதாக இந்த ஆய்வு உணர்த்துகிறது.