மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் காதி குர்த் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இருவர் ஹாஸ்பிடலுக்கு பிரசவத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை எனவும் எனவே சாலை வசதி அமைத்து தாருங்கள் எனவும் கூறி வீடியோ வெளியிட்டது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் எங்கள் கிராமத்தில் தார் சாலை இல்லாத நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நாங்கள் ஹாஸ்பிட்டலுக்கு சேறும் சகதியுமான சாலையில் தான் சென்று வருகிறோம் என கூறியுள்ளனர். இந்த வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருவதால் தற்போது மாவட்ட ஆட்சியர் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.

இது பற்றி பேசிய பாஜக எம் பி ராஜேஷ் மிஸ்ரா ஒவ்வொரு பிரசவத்திற்கு ஒவ்வொரு தேதி இருக்கும். எனவே அதற்கு முன்பாக நாங்கள் சாலை வசதி அமைத்துக் கொடுப்போம் என்று கூறினார். அதோடு கர்ப்பிணி பெண்கள் சாலை இல்லாததால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் எங்களிடம் ஹெலிகாப்டர் இருக்கிறது அதுபோக ஏராளமான வசதிகள் இருக்கிறது என்பதால் கவலைப்பட வேண்டாம் என்றார்.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை மந்திரி ராகேஷ் சிங் சமூக வலைதளத்தில் பதிவுகள் போட்டால் நாங்கள் உடனடியாக பதில் சொல்ல வேண்டுமா. பட்ஜெட் குறைவாக இருக்கிறது. மேலும் சமூக வலைதள கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.