மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், வீண்பழி மற்றும் கண்டிப்புக்கு பயந்து மூன்று சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, தனது சகோதரி மற்றும் தோழியுடன் கடைக்குச் சென்றபோது, வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனிடம் பேசியுள்ளார்.
இதை அந்தச் சிறுமியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட, வீட்டில் தெரிந்தால் திட்டுவார்களே என்ற பயத்தில் மூவரும் வீட்டிற்கு செல்லாமல் தலைமறைவாகினர். நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் கடத்தல் பீதி நிலவியது.
புகாரைப் பெற்ற காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சந்திப்பிற்கு அருகில் அச்சத்துடன் ஒளிந்திருந்த மூன்று சிறுமிகளையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
விசாரணையில், வெறும் பயத்தின் காரணமாகவே அவர்கள் இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது. பின்னர், சிறுமிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பிள்ளைகள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் மூலம் அப்பகுதியில் நிலவிய தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
