தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். நடிகர் விஜய் கரூருக்கு நேரில் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று அவர் வீடியோ கால் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரில் பேசினார். இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் கிடையாது.
அவரை கைது செய்ய வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை. கரூரில் நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் நிலையில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் அரசியல் செய்கிறது. விஜயை கையில் எடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. சதிகார மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்று பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். மேலும் விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள் என்று கூறினார்.
