“மின்சாரத்துறையில் நடைபெறும் ஊழல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், தவறு நடந்த இடம் கரூராக இருந்தாலும் சரி, அல்லது கோவையாக இருந்தாலும் சரி, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாரையும் அரசு சகித்துக்கொள்ளாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் லாபகரமாகச் செயல்பட்டு வந்த மின்சாரத்துறை, கடந்த 20 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது இத்துறை சுமார் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
துறையை மீட்டெடுக்கவும், நஷ்டத்தில் இருந்து நல்வழிப்படுத்தவும் ஊழலற்ற நிர்வாகம் அவசியம் என்பதால், இனிவரும் காலங்களில் முறைகேடுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடி பேச்சு தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
