கரூர் மாவட்டத்தில் உள்ள பண்பாட்டு கழகம் சார்பில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 264- வது பிறந்த நாளை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு திரிந்ததால் ஜவஹர் பஜார், கோவை ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது மனோகரா கார்னரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த வாலிபர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஊர்வலமாக செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் வாலிபர்கள் போலீசார் கூறியதை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பணியில் இருந்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பானுமதி ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வாலிபர்கள் சாவியை எடுக்க விடாமல் பானுமதியின் கையை பிடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால் வாலிபர்கள் அங்கிருந்து ஓடினர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து வாலிபர்கள் சுக்காலியூர் பகுதியில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.