கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 699 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப்பள்ளிகள், 232 நடுநிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள், 133 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமாக  1,175 பள்ளிகள் உள்ளது.

2-ஆம் பருவத் தேர்வு விடுமுறைக்கு பின்னா் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நாளை (வியாழக்கிழமை) அன்று தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கூடம் திறக்கும் முதல் நாளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. ஆகவே கடந்த 3 நாட்களாக இந்த பாட புத்தகங்களை, அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதி பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கின்ற பணியானது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 84 பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை நேற்றைய நாளில் உதவி வட்டார தொடக்க கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், செலின்மேரி, கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்  வழங்கினார்கள்.