மத்திய காசாவின் தெய்ர் அல்-பாலா நகரில் அமைந்துள்ள அல்-அக்ஸா மருத்துவமனை அருகே, பட்டினியால் சோர்வடைந்தது  ஊட்டச்சத்து மருந்து வாங்க வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில், 8 சிறுவர்கள், 2 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று அந்த மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறித்த மருத்துவமனை, அமெரிக்காவைச் சேர்ந்த Project HOPE என்ற உதவி அமைப்பால் இயக்கப்படுகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவமனைக்கு எதிராக தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டத்துக்கு புறம்பான செயல்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் ராணுவம் “ஒரு ஹமாஸ் பயங்கரவாதியை குறிவைத்த தாக்குதலாக இது அமைந்தது” என விளக்கம் அளித்து, “பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம்” தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது, காசா பகுதியில் கடந்த 24 மணி நேரத்திலேயே மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்வழியாக, 2023 அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை மொத்தம் 57,762 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,37,656-ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இதுவரை முக்கியமான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த தொடர்ந்து தாக்குதல்களும், மருத்துவமனைகள், பொதுமக்கள் மீது நடக்கும் நடவடிக்கைகளும், உலக நாடுகளில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகின்றன.