சீனப் புத்தாண்டை முன்னிட்டு தனது நிறுவனம் நடத்திய கொண்டாட்டத்தில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் பரிசாகக் கிடைத்ததைக் கண்டு ‘ஜியாங்’ என்ற ஊழியர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தார். உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்து அந்தப் பெட்டியைப் பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றவருக்கு, அங்கு காத்திருந்தது ஒரு பேரிடி. ஆவலுடன் பெட்டியைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே விலை உயர்ந்த ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக, வெறும் சாதாரண டைல்ஸ் கற்கள் மட்டுமே இருந்தன.
மேலும் நம்மள நம்ப வச்சி ஏமாத்திப்புட்டாங்க சித்தப்பா” என்கிற ரேஞ்சுக்கு, உழைத்த நிறுவனமே தன்னை இப்படி ஏளனம் செய்ததை ஜியாங்கால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள ஜியாங், இது தற்செயலாக நடந்த தவறு என்பதைத் தாண்டி, தன்னை மனரீதியாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கௌரவமான ஒரு பொது மேடையில் வழங்கப்பட்ட பரிசில் இத்தகைய தில்லுமுல்லு நடந்திருப்பது அநாகரிகமானது என்றும், இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் முறைப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விவகாரம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதம் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
