வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் போது, கலெக்‌ஷன் ஏஜென்ட்கள் வாடிக்கையாளர்களைத் தரக்குறைவாக நடத்துவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விதிமுறைகள், லோன் வாங்கியவர்களுக்குப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளன.

​புதிய விதிகளின்படி, ஏஜென்ட்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவும், இரவு 7 மணிக்குப் பின்னதாகவும் கடனைத் திரும்பக் கேட்டு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது. மேலும், கடன் பெற்றவரைத் தவிர அவருடைய குடும்பத்தினர் அல்லது நண்பர்களை எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்ளக் கூடாது. முக்கியமாக, ஏஜென்ட்கள் வாடிக்கையாளரைச் சந்திக்க நேர்ந்தால், வாடிக்கையாளர் எந்த இடத்தைக் குறிப்பிடுகிறாரோ அங்குதான் சென்று சந்திக்க வேண்டும்.

மிரட்டலோ, ஆபாசமான வார்த்தைகளோ அல்லது அநாகரிகமான நடத்தையோ இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வசூலில் ஈடுபடுபவர்கள் கௌரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் RBI திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.