உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மூன்று சிறுமிகள், ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷிகா, பிராச்சி மற்றும் பாக்கி ஆகிய இந்த மூன்று சகோதரிகளும் கடந்த சில ஆண்டுகளாக கொரிய கலாச்சாரம் மற்றும் இந்த விசித்திரமான ஆன்லைன் விளையாட்டின் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கருதுவதை விட, ‘கொரிய இளவரசிகள்’ என்று கற்பனை செய்து கொண்டு அந்த மாய உலகில் வாழ்ந்து வந்துள்ளனர். தங்களின் டைரியில் உருக்கமான மன்னிப்புக் கடிதங்களை எழுதி வைத்துவிட்டு, இந்த விபரீத முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

இந்த ஆன்லைன் விளையாட்டு பெரும்பாலும் டீனேஜ் குழந்தைகளை இலக்காகக் கொண்டு, பல்வேறு சவால்கள் மற்றும் பணிகளை வழங்கி அவர்களை மனரீதியாகக் கட்டிப்போடுகிறது. கோவிட் காலத்திலிருந்தே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்த இந்தச் சிறுமிகள், கைபேசி பயன்பாட்டிற்குத் தந்தை தடை விதித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு விருப்பமான விளையாட்டிலிருந்து தங்களைப் பிரிக்க முடியாது என்றும், கொரியாவே தங்களின் உலகம் என்றும் அவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறி வந்தனர். குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பெற்றோர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக விடுத்துள்ளது.