உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது தோழியுடன் தங்கியிருந்தபோது இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, பதற்றமடைந்த அவரது தோழி அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிவித்தனர்.
இதனால் மருத்துவர்கள் வாலிபரின் இறப்பை உறுதி செய்தவுடன், சட்ட சிக்கல்களுக்கு பயந்த அவரது தோழி, யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலேயே உடலை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அடையாளம் தெரியாத சடலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் உடலை விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்ட போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தலைமறைவாக உள்ள அவரது தோழியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முறையான மருத்துவ ஆலோசனையின்றி இது போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
