நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை கண்டிராத பின்னடைவைச் சந்தித்து வருகிறது. 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் அந்த அணி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
மும்பை அணியின் இந்த மோசமான நிலைக்கு நிலையற்ற பந்துவீச்சுப் பிரிவே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், மும்பை பந்துவீச்சாளர்கள் அதனைத் தற்காக்கத் தவறிவிட்டனர். ஹைதராபாத் அணி 19-வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. அதேபோல், தொடக்க ஆட்டங்களில் பெரும் நம்பிக்கையுடன் களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் மும்பை அணி தடுமாறுகிறது. துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 போட்டிகளில் வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஆட்டத்திலும் போதிய நிலைப்புத்தன்மை இல்லை.
மும்பையின் இந்த வீழ்ச்சி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் கூறுகையில், சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் காட்டிய தீவிரமான உழைப்பு அவர்களை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடையச் செய்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
“இந்திய மண்ணில் உலகக் கோப்பையை வெல்வதற்காக பும்ரா, சூர்யகுமார், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் தங்களின் முழு ஆற்றலையும் செலவிட்டிருப்பார்கள். உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக பும்ரா போன்ற வீரர்களுக்கு புத்துணர்ச்சி பெற சில நாட்கள் இடைவெளி தேவைப்பட்டது. ஆனால், வணிக ரீதியிலான ஒப்பந்தங்களால் அவர்கள் நேரடியாக ஐ.பி.எல். களத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி காயத்திற்குப் பிறகு சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் வலுவாகத் திரும்பியதை உதாரணமாகக் குறிப்பிட்ட பிஷப், வீரர்களை மீண்டும் பார்முக்குக் கொண்டு வர இதுபோன்ற சிறிய இடைவெளிகள் உதவும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ‘ரிவெஞ்ச் வீக்’ ஆட்டத்தில், தனது பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று (மே 2) மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திலாவது மும்பை அணி மீண்டு வருமா என்பதை ஜியோ ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளங்களில் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.
