அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில், மருத்துவ உலகையே உலுக்கிய ஒரு பகீர் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி தாமஸ் என்ற நபர் மூளைச் சாவு (Brain Dead) அடைந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே உடல் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்திருந்ததால், அவரது இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.

​அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது! மருத்துவர்கள் உறுப்புகளை எடுக்கத் தயாரான அந்த நொடியில், ‘மூளைச் சாவு’ அடைந்ததாகச் சொல்லப்பட்ட அந்தோணி திடீரெனக் கண்களைத் திறந்து அழுதார். இதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். “அவர் படுக்கையில் அங்கும் இங்கும் அசைந்தார், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது” என அங்கிருந்த செவிலியர் ஒருவர் பீதியுடன் தெரிவித்துள்ளார். 2021-ல் நடந்த இந்தச் சம்பவம், தற்போது ஒரு நேர்காணல் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது. இன்று அவர் முழு ஆரோக்கியத்துடன் உயிர் பிழைத்து வந்திருப்பது ஒரு மாபெரும் மருத்துவ அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.