இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சவாலாக அமையும் வகையில், திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முக அமைப்பைக் கொண்டும், மாநில அடையாளத்தைக் கொண்டும் ஒரு இந்தியக் குடிமகனை அந்நியமாகப் பார்க்கும் குறுகிய மனப்பான்மையின் உச்சகட்டமாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

மேலும் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த மாணவர், தன்னைத் தாக்கியவர்களிடம் “நான் இந்தியன்” என்று உரக்கச் சொன்ன வார்த்தைகள், நம் நாட்டில் வேரூன்றியிருக்கும் இனவெறி பாகுபாட்டின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கல்வி கற்கவும், வேலை நிமித்தமாகவும் பிற மாநிலங்களுக்குச் செல்லும் வடகிழக்கு மாநில மக்கள், இன்றும் இத்தகைய அநாகரீகமான கேலிக்கும் வன்முறைக்கும் ஆளாவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் “இந்தியன்” என்கிற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்திருப்பதாக நாம் பெருமிதம் கொண்டாலும், சக குடிமகனை அவன் தோற்றத்தைக் கொண்டு வேற்றுமைப்படுத்துவது தேசிய ஒருமைப்பாட்டிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

இந்த மாணவனின் இறுதி வார்த்தைகள் வெறும் மரண ஓலமல்ல; அது இந்தச் சமூகத்தின் மனசாட்சியை நோக்கி எழுப்பப்பட்ட ஒரு வலிமிகுந்த கேள்வி. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, இத்தகைய இனவெறி மனப்பான்மையை வேரறுக்க கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு மிக அவசியமாகும்.