
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காளசமுத்திரம் பகுதியில் ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிராலன் என்ற மகனும், தேவிகலா என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு ஹரிணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமன் உயிரிழந்தார். சிராலன் ராணுவத்தில் வேலை பார்ப்பதால் கோவிந்தம்மாள் தனது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தம்மாளின் இரண்டு மகள்களுக்கு குழந்தை இல்லை. தேவி கலாவிற்கு மட்டும் எப்படி இரண்டு குழந்தைகள் பிறந்தது என்பது தொடர்பாக மாமியார் மருமகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிந்தம்மாள் தனது மருமகளிடம் தனது மகன் ராணுவத்தில் வேலை பார்க்கும் நிலையில் உனக்கு எப்படி இரண்டு குழந்தைகள் பிறந்தது என மருமகளின் நடத்தை மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த தேவிகலா தனது மாமியாரின் கழுத்தை நெரித்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததால் அக்கம் பக்கத்தினர் கோவிந்தம்மாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தேவிகலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.