சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கே.பி.ஒய். பாலா, தான் சம்பாதித்த பணத்தின் மூலம் பலருக்கும் உதவி செய்து வரும் நிலையில், அவரது உதவிகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆரம்பத்தில் சிறிய உதவிகளைச் செய்து வந்தவர், தற்போது கிராமங்களுக்கு விவசாயப் பொருட்கள், ஆம்புலன்ஸ், வாகனங்கள் போன்ற பெரிய உதவிகளைச் செய்து வருகிறார்.

நான் உதவி செய்வதை வீடியோவாக வெளியிடுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்புவதாகவும், அதற்குப் பதிலளித்த பாலா, “நான் செய்ற உதவியைப் பார்த்து, என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று மேலும் சிலர் முன்வர வேண்டும், மற்றவர்களுக்கு உதவும் சிந்தனை வரவேண்டும் என்பதற்காகவே வீடியோ வெளியிடுகிறேன்” என்று விளக்கமளித்துள்ளார். இருப்பினும், பாலா சமீபத்தில் சாலை சேதத்தைச் சரி செய்யும் காணொளியை வெளியிட்டபோதும், வழக்கம் போல விமர்சனங்கள் எழுந்தன.

​இந்த நிலையில், வி.ஜே. ஆதவன் மீண்டும் கே.பி.ஒய். பாலாவைப் பொதுவெளியில் விமர்சித்துள்ளார். “உதவி செய்வது தவறு இல்லை, ஆனால் கேமராவை வைத்துக்கொண்டு விளம்பரம் செய்வதுதான் தப்பு. உதவி செய்யும் காணொளியை வெளியிடுவதன் மூலம், கொடுத்ததைவிட அதிகப் பணம் சம்பாதித்து விடுகிறார்கள். பிளாக் பாண்டி போன்றவர்கள் செய்யும் உதவிகளை யாரும் பார்க்க மாட்டார்கள், ஆனால் 4கே வீடியோ எடுத்துப் போட்டால் பார்க்கிறார்கள்” என்றும் ஆதவன் பேசியுள்ளார்.

முன்னதாக, பாலா ஆம்புலன்ஸ் கொடுத்தபோது, தான் யூடியூப் சேனல் எதுவும் வைக்கவில்லை என்றும், இன்ஸ்டாகிராமில் இடுவதால் தனக்கு பணம் வரவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்தச் சூழலில், மீண்டும் ஆதவன் பேசியிருப்பதால், பாலா இதற்குப் பதிலளிப்பாரா அல்லது மௌனம் காப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.